விதைப்போம் ஆழ்மனதுக்குள் - அ. பாரதி
விதைப்போம் ஆழ்மனதுக்குள்
- அ. பாரதி
அழகிய புன்சிரிப்புடன், நிமிர்ந்த நேர்க்கொண்டப் பார்வையில் ஒருவர் சாலையில் சென்றுக்கொண்டிருந்தார். அவர் செல்லும் பாதையின் ஓரங்களில் அழகிய வண்ணம் கொண்ட மலர்கள், அதன் மணங்களைப் பரப்பிக் கொண்டிருந்தனர். சில்லென்று காற்று மரங்களில் இருந்து வீசத் தொடங்கின. அங்குமிங்கும், சாலையின் இருபுறமும் வண்டிகள் வேகமாக நகர்ந்துக் கொண்டிருந்தன. தீடிரென்று, அந்த நபரின் மனதில் ஒரு எண்ணம் தோன்றி வேகமாக வீட்டை நோக்கி சென்றார்.
அவ்வாறு அவர் வேகமாக செல்லும் போது, வழியில் அவரின் உயிர் நண்பரை சந்தித்தார். நண்பரைப் பார்த்தவுடன் அவருக்கோ அளவுக் கடந்த ஆனந்தம். உற்சாகத்துடன், “ஏய்! தனிஷ் கொஞ்சம் நில்” என்று உரத்த சத்தத்துடன் தனது நண்பரை அழைத்தார். சத்தத்தைக் கேட்ட தனிஷோ, சத்தம் வரும் இடத்தில் திரும்பிப் பார்த்தார். அந்த இடத்தில் தனது உயிர்த்தோழர் நிற்பதைக் கண்டார். பார்த்த அந்த நொடியில், அவரது முகமோ மகிழ்ச்சியின் உச்சத்தில் துள்ளிக் கொண்டிருந்தது.
நீண்ட நாட்கள் கழித்து சந்தித்ததால், ஒருவருக்கொருவர் தழுவிக் கொண்டு நலம் விசாரித்துக் கொண்டனர். இருபது நிமிடம் கழித்து, அந்த நபருக்கு உள்ள முக்கிய வேலைக் குறித்து நினைவு வந்தது. உடனே தன் நண்பரிடம், தனிஷ்! எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. நீயும் என்னுடன் வா என்று அழைத்தார். அதனைக் கேட்ட தனிஷ், “சரி நான் உன்னுடன் வருகிறேன்” என்று சம்மதித்தார்.
இருவரும் அவரின் வீட்டிற்கு விரைந்து செல்வதற்காக, ஒரு வாடகை காரில் அமர்ந்து சென்று பேசிக் கொண்டே வீட்டை நோக்கி சென்றனர். நாம் இவ்வாறு பேசி எவ்வளவு நாளாகிவிட்டதல்லவா மஹின்! என்று தனிஷ் கூறினார். அதற்கு, மஹின் ஆமாம் தனிஷ்! என்று பதிலளித்தார். மஹினும், தனிஷூம் சிறுவயதிலிருந்தே ஒரே பள்ளியில் மேல்நிலைப்பள்ளி வரைக்கும் படித்தனர். அதனைத் தொடர்ந்து, கல்லுரிப் படிப்புக்கு இருவரும் வெவ்வேறு இடத்தில் இருந்து தனக்கு பிடித்தமான பாடங்களைத் தேர்ந்தெடுத்தனர். தனிஷ் பொறியியல் பாடத்தைத் தேர்வு செய்தார். மஹினோ, தமிழ் பாடத்தைத் தேர்வு செய்தார்.
இருவரும், தனது படிப்பில் மிகவும் பரப்பரப்பாக இருந்தனர். மஹின், சிறுவயதிலிருந்தே தமிழில் நாட்டம் கொண்டதால் தமிழைப் படித்து ஒரு அரசுக் கல்லூரியில், அரசு பேராசிரியராகப் பணியாற்றுகிறார். தனிஷோ, ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக சேர்ந்து பணிபுரிகிறார். தற்போது தனிஷ் மற்றும் மஹினின் வயதோ முப்பது. ஏறத்தாழ பன்னிரெண்டு வருடங்களுக்கு பிறகு இருவரும் சந்திக்கின்றன. இருவருக்கும் கல்யாணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். மஹினின் மனைவியின் பெயர் ஹரினா. ஹரினா ஒரு ஆங்கில பேராசிரியராக தனியார் கல்லூரி ஒன்றில் பணிபுரிகிறார். இவர்களுக்கு கல்யாணமாகி ஐந்து வருடங்கள் ஆகின்றன. நான்கு வயதில், வக்ஸனா என்ற ஒரு பெண் குழந்தையும், ஒரு வயதில் ரதீன் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. தனிஷுன் மனைவியோ, தனிஷ் பணியாற்றும் தனியார் நிறுவனம் ஒன்றிலேயே ஊழியராகப் பணிபுரிகிறார். இருவரும் மூன்றாண்டுகளுக்கு முன்பு, காதல் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு இரண்டு வயதில், ரதியா என்ற பெண் குழந்தையும், ரீஜித் என்ற பெயரில் ஆறு மாதமேயான ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
மஹின் மற்றும் தனிஷ் இருவரின் குணநலமும் சிறுவயதிலிருந்தே நல்லதாகவே இருந்தது. அவர்களின் நீண்ட நாள் சந்திப்பில், இருவரும் உடல்மாற்றத்தைத் தவிர வேறு எந்த ஒரு மாற்றத்தையும் கண்டுப்பிடிக்கவில்லை. முகமலர்ச்சியுடனேயே, இருவரும் தனது உரையாடலைத் தொடர்ந்தனர். தங்களைச் சுற்றி என்ன நிகழ்கிறது என்றுக் கூட உணராமல், இருவரும் உரையாடிக் கொண்டிருந்தனர். தீடிரென்று, கார் நின்றது.
இருவரும் தங்களது உரையாடலை நிறுத்தி விட்டு, சற்று வெளியே பார்த்தனர். மஹினோ தனிஷிடம், நமது வீடு வந்து விட்டது, வா, நாம் உள்ளே செல்லலாம் என்று கூறினார். பின்னர், இருவரும் உள்ளே சென்றனர். அவர்கள் வீட்டிற்கு வந்த போது, நேரமோ இரவு ஏழு அரையாக இருந்தது. வீட்டில் நிகழும் அனைத்தையும் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தார் தனிஷ். மஹினின் ஒவ்வொரு செயலும், தனிஷைப் பூரிப்படையச் செய்தது. மஹினின் பெற்றோர் மிகவும் வயதானவர்கள். அவர்களுக்கு ஏறக்குறைய எண்பது வயது இருக்கும். அவர்கள் மஹினுடன் தான் வசிக்கிறார்கள். அவர்களுக்கு எப்பொழுதும் ஒரு வழக்கம் உண்டு. என்னவென்றால், வீட்டில் உள்ள அனைவரும் உணவு அருந்த வந்தால் தான் அவர்கள் உணவு உண்பார்கள்.
அது மட்டுமல்ல, குடும்பத்தில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டு வீட்டுக்குள் வரும் வரை, அவர்களின் கண்கள் வாசலை நோக்கியே இருக்கும். இதனால் தான், தன் பெற்றோரைக் காக்க வைக்கக் கூடாது என்று மஹின் உடனே வீட்டிற்கு விரைந்து வந்தான் தன் நண்பருடன். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட உடனேயே, தனிஷூன் கண்களில் இருந்து கண்ணீர் சொட்டு சொட்டாக வடிந்தது. காரணம், வீட்டில் தன் பெற்றோரைத் தவறான வார்த்தைக் கொண்டு இகழ்ந்து விட்டு தான் சாலையில் கோபமான மனநிலையில் சென்றுக் கொண்டிருந்தான். பின்னர், நீண்ட நாட்கள் கழித்து தன் நண்பனைக் கண்டதால், கோபத்தை விட்டு விட்டு, தன் முகத்தில் சிரிப்பை அணிந்திருந்தான்.
தன் நண்பனின் செயல், அவனின் ஒவ்வொரு அணுகுமுறையையும் கண்டு, மனம்திருந்தினான். அதுமட்டுமின்றி, இனிமேல் தன் பெற்றோரை எந்த சந்தர்ப்பத்திலும் இகழக் கூடாது, வார்த்தையால் அவர்களைக் காயப்படுத்தாமல், மனநிறைவாக அவர்களைப் பராமரித்துக் கொள்ள வேண்டும். இவ்வகையான நற்பண்புகளை, நம் குழந்தைகளுக்கும் கற்பிக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டான்.
மஹினுக்கு அவனது பெற்றோர், நற்பண்புகளையும், நற்குணங்களையும் அவனது ஆழமனதுக்குள் விதைத்துள்ளதால், அவனது பண்புகள், மற்றவர்களிடம் பழகும் விதம் அனைத்தும் சிறப்பாக உள்ளது. தானும், நற்குணங்களை எப்பொழுதும் தரித்துக் கொள்ள வேண்டும் என்று மனதில் ஒரு எண்ணத்தை விதைத்தார். பின்னர் மஹின், மஹினின் பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து உணவு உண்டு விட்டு அவர்களிடம் இருந்து விடைக்கூறிவிட்டு தன் வீட்டை நோக்கி மெல்ல நடைப்போட்டான் தனிஷ் மனஅமைதியுடன்.
Comments
Post a Comment